ஐ.நா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த இந்தியா.!

ஈரான் போராட்டம் குறித்து ஐ.நா. சபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த இந்தியாவிற்கு ஈரான் தூதர் முகமது பதாலி நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 5 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்து உள்பட 25 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.இதையடுத்து, இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக் உள்பட 7 நாடுகள் எதிராக வாக்களித்திருந்தன. தொடர்ந்து, 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகினர்.
இத்தீர்மானத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த இந்தியாவுக்கு ஈரான் நன்றி தெரிவித்தது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து நீதி, பன்முகத்தன்மை மற்றும் தேச இறையாண்மைக்கு எப்போதும் ஆதரவளிக்கும் இந்தியாவிற்கு நன்றியைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *