இந்தியாவின் முதல் LNG இரட்டை எரிபொருள் ரெயில் – தொடங்கி வைத்தார் அமித் ஷா !

குஜராத் மாநிலம் சபர்மதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தியாவின் முதல் LNG இரட்டை எரிபொருள் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சபர்மதி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரூ.1,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. WAG-12 என்ஜின் பராமரிப்பு பணிமனை, தானியங்கி சிக்னல் அமைப்பு மற்றும் ‘கவச்’ ரெயில் பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட திட்டங்களும் இதில் அடங்கும்.

நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரெயில்வே துறையை நவீனமயமாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். சரக்கு ரெயில்களுக்கான தனி வழித்தடங்கள், அதிவேக ரெயில் திட்டங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டிய அமித்ஷா, அந்த கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து மக்கள் புள்ளிவிவரங்களுடன் விவாதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் தொடர்பாக சிறிய குற்றச்சாட்டுகூட நிரூபிக்கப்படவில்லை என்றும் அமித்ஷா கூறினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *