Statue of Unity: பிரதமர் மோடி பெருமிதம்!

Advertisements

இன்று ஒட்டுமொத்த உலகமே இந்தியாவை உற்றுநோக்குகிறது என்று குஜராத்தில் பிரதமர் மோடிபேசினார்.

ஆமதாபாத்: இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார். ஒற்றுமையை வலியுறுத்தும் உலகிலேயே மிகப்பெரிய படேல் சிலை நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்ற பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: இன்று என் கண்முன் மினி இந்தியாவின் வடிவம் தெரிகிறது. மாநிலங்கள், மொழிகள், கலாசாரங்கள் வேறுவேறாக இருந்தாலும், இங்கு அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறீர்கள். ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் நடந்த நிகழ்வுகள், ஜனவரி 26 அன்று கர்தவ்ய பாதையில் அணிவகுப்பு மற்றும் நர்மதைக் கரையில் ஒற்றுமை நாள் கொண்டாட்டங்கள் ஆகியவை தேச எழுச்சியின் மூன்று சக்திகளாக மாறியுள்ளன.

ஏக்தா நகருக்கு வரும் மக்கள் இந்த பிரமாண்ட சிலையைப் பார்ப்பது மட்டுமல்லாமல், சர்தார் படேலின் வாழ்க்கை, தியாகம் மற்றும் ஒற்றுமையான இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் அறிகிறார்கள். நாடு முழுவதும் ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தில்’ லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். 140 கோடி இந்தியர்களிடையே இந்த ஒற்றுமை ஓட்டத்தைப் பார்க்கும்போது, சர்தார் படேலின் லட்சியங்கள் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உறுதியின் வடிவில் நமக்குள் ஓடுவது போல் தெரிகிறது.

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளில், நம் இந்தியாவை செழிக்கச் செய்ய வேண்டும், நம் இந்தியாவை நாம் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பான 25 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவுக்காக தன்னை தியாகம் செய்திருக்கிறார்கள். இப்போது, அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று ஒட்டுமொத்த உலகமே இந்தியாவை உற்றுநோக்குகிறது.

இன்று இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் உள்ளது. ஜி20 மாநாட்டில் இந்தியாவின் திறமையை கண்டு உலகமே வியப்படைந்துள்ளது. பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நமது எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

உலகில் வேறு எந்த நாடும் அடைய முடியாத நிலவின் பகுதியை இன்று இந்தியா அடைந்துள்ளது நமக்கு பெருமை அளிக்கிறது. தேஜாஸ் போர் விமானங்கள் முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரை அனைத்தையும் இந்தியாவே தயாரித்து வருகிறது. இந்தியாவில், நமது தொழில் வல்லுநர்கள் உலகின் பில்லியன் டாலர் நிறுவனங்களை இயக்கி வழிநடத்துகிறார்கள். உலகின் பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் மூவர்ணக் கொடியின் பெருமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது இளைஞர்கள் சாதனைகளை முறியடித்து, பதக்கங்களை வெல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *