
திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் செயல்படுத்தி வரும் அறக்கட்டளையின் அமரர் ஊர்வதி வாகனத்தில் போலியான வாகனப் பதிவெண்ணை ஒட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராகத் தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் தவெகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரை அதே கட்சியைச் சேர்ந்த இருவர் மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டனர்.
இதில் திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணணுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இரண்டு நாட்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்குத் தன்னிடம் திமுகவினர் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், லாரியை மோதித் தன்னைக் கொல்ல முயன்றதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சரவணன் முன்வைத்தார்.
இதற்காக அவருக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்றுத் திருவைகுண்டம் புதுக்குடியில் ரேசன்பொருட்கள் வைத்திருக்கும் குடோனுக்குச் சென்று ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன் லாரியின் டயர்கள் மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறி ஒப்பந்தக்காரரிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது மட்டுமல்லாமல் கிண்டல் கேலிக்கும் ஆளாகி உள்ளது.
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் மக்கள் நல அறக்கட்டளையில் ஆதரவில்லாமல் இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய வைத்துள்ள அமரர் ஊர்தி இப்போது பேசுபொருளாகி உள்ளது.
அறக்கட்டளையில் உள்ள அமரர் ஊர்தியில் உள்ள வாகன எண் போலி என்பது தெரியவந்ததையடுத்துச் சமூக வலைத்தளங்களில் சட்டமன்ற உறுப்பினர் கேலி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அமரர் ஊர்வதியில் டிஎன் 76 ஒய் 6253 என்ற எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த எண் ஹீரோ ஸ்பிளண்டர் என்ற இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணாகும். தன்னுடைய அறக்கட்டளையின் வாகனத்திலே போலி நம்பரை வைத்துள்ளதால் திருட்டு வாகனத்தில் சொர்க்கரதமா? என்று சமூக வலைத்தள வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.




