நைந்துபோன நெசவாளர் வாழ்வு..கண்டுகொள்ளாத அரசுகள்? ஏன் இந்த அலட்சியம்.?

Advertisements
உலக மக்களுக்குத் தேவையான தானியங்கள், காய்கறிகள், பழங்களை விளைவிப்பது உழவுத்தொழில். அது உலகின் முதல்தொழில். முதன்மைத் தொழில். உணவை உண்ட மனிதன் மானத்துடன் வாழ உடலை மறைக்கத் துணியை நெய்து தருவது நெசவுத் தொழில். இந்தத் தொழில் இப்போது எந்த நிலையில் உள்ளது என்று பார்ப்போம்….
மதுரையிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறையாக நெசவுத் தொழிலைச் செய்து வருகின்றனர். ஒரு காலத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த கைத்தறி நெசவுத் தொழில், விசைத்தறிகளின் வரவு, நூல்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றால் இப்போது நலிந்து வருகிறது.
இந்நிலையில் மதுரை நிலையூரில் கைத்தறி நெசவில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் நூல்விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் தாங்கள் வறுமையிலும் கடனிலும் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். கைத்தறி நெசவாளரான வெங்கடேஷ், தன் பாட்டனும் தந்தையும் நெசவுத் தொழிலே செய்து வந்ததாகவும், ஆனால் இப்போது நெசவுத்தொழிலில் கிடைக்கும் கூலி வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றப் போதுமான அளவில் இல்லை என்றும் தெரிவித்தார்.
வாடகை வீட்டில் இருந்துகொண்டு இரண்டு நாட்களில் ஒரு சேலை நெய்தால் 850 ரூபாய் கூலி கிடைப்பதாகவும், வீட்டுவாடகை, பிள்ளைகளின் படிப்பு, உணவு, மருத்துவச் செலவு எனப் பல்வேறு செலவுகள் உள்ள நிலையில் இந்தக் குறைந்த கூலி தங்கள் வாழ்க்கைச் செலவுக்குப் போதுமானது இல்லை என்றும் குறிப்பிட்டார். மத்திய மாநில அரசுகள் நெசவாளர்களுக்கு மானியக் கடன், வட்டியில்லாக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தாலும், மாநில அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். மாநில அரசு விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாகவே இருப்பதாகக் கூறிய அவர், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
கைத்தறி நெசவாளர்களுக்காகத் தனியாக நெசவுக் கூடங்களை உருவாக்குவது பற்றி மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நெசவுத்தொழிலில் குறைந்த அளவே கூலி கிடைப்பதாகவும், இதனால் பிழைப்பது கடினமாகிவிட்டதால் பல குடும்பங்கள் வறுமையில் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்தார். இந்த நிலை தொடர்ந்தால், வேறு வேலைகளுக்கு மாறுவதைத் தவிரத் தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் நெசவாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
கைத்தறி நெசவாளர்களுக்கு மானியக் கடன், கட்டுப்படியான ஊதியம், தேவையான உதவிகள் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *