
1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச்செல்லுங்கள். வங்கியில் பணம் போடுவதற்கு, பணம் எடுப்பதற்கு, கேட்பு வரைவோலை பெறுவதற்கு என ஒவ்வொன்றுக்கும் உள்ள படிவங்களை நிரப்புவது எப்படி? என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். தானியங்கிப் பணம் வழங்கும் பொறியில் (Automatic Teller Machine) எவ்வாறு பணமெடுப்பது? என்பதையும், பணத்தைச் சிக்கனமாகச் செலவிடுவது பற்றியும், வைப்புத்தொகையாகச் சேர்த்து வைப்பது பற்றியும் அவர்களுக்கு அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.
2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்துக்கும், மனநலக் காப்பகத்துக்கும் அழைத்துச் சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்? என்பதை அருகிலிருந்து எடுத்துக் கூறுங்கள். அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.
3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.
4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளைப் பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே நட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்க்கச் சொல்லுங்கள். மரம் வளர வளரச் சிறு சிறு பரிசுகளைக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.
5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள். அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள். இரத்ததானத்தின் தேவையை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.
6) மிக முக்கியமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் துன்பத்தை அவர்கள் கண்முன் கொண்டுகாட்டுங்கள். விபத்தினால் அடிபட்டு மருத்துவம் பெற்றுவருபவரைக் காணச்செய்தாலே போதும். அவர்கள் எவ்வாறு வண்டிகளை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துக்கொள்வார்கள்.
7) நகர்ப்புறத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்த ஊர் உண்டு. அங்கு உங்கள் பிள்ளைகளைக் கூட்டி சென்று பாட்டன் பாட்டி, நம் சொந்தக்காரர்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள். நம் முன்னோர்களின் “பயிர்செய்” முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காகப் படிப்படியாகப் பட்ட பாடுகளையும் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.
8) நகர்ப்புறங்களில் நெருக்கடியான சாலைகளில் மிதிவண்டி ஓட்ட முடியாமல் உங்கள் பிள்ளைகள் இருக்கலாம். அதனால் ஊர்ப்புறத்தில் அமைதியான நெருக்கடி இல்லாத மண்சாலைகளில் பிள்ளைகளுக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுங்கள்.
9) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்குக் கூட்டிச் சென்று, அரசும் அதன் பொறிமுறைகளும் அவை செயல்படும் வகைகளையும் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் எதிர்காலத்தில் எந்தத் துறைக்கு வேலைக்குச் செல்லலாம் என்பதற்குப் சின்ன பொறி தட்டி விடுங்கள். அதன் பின் அவர்களாகளே எந்தத் துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காகச் செயல்படத் தொடங்கி விடுவார்கள்.
10) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளைக் கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனத்தில் ஆழமாகப் பதிய வையுங்கள். அவர்களுக்காகச் சிறு விளையாட்டுப் பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்குப் பரிசளிக்கச் சொல்லுங்கள்.
11) அனைத்து மதக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் “அன்பை” மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள். இந்தப் பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயன்றாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்..


