சவுதி தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – ஹவுதி அமைச்சகம் எச்சரிக்கை!

இனி வரும் காலங்களில் சவுதி அரேபியாவின் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஹவுதி வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏமனின் ஹுதெய்தாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆணையத்திற்குச் சொந்தமான மையங்களைக் குறிவைத்து நள்ளிரவு சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியுள்ளது. கடலோர நகரமான ஹுதெய்தா, ஹவுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு ஏமன் பகுதிகளுக்கு மிக முக்கியமான இணைப்பு பாதையாக திகழ்ந்து வருகிறது. இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வணிகப் பொருட்கள் இந்தத் துறைமுகத்தின் வழியாகவே விநியோகிக்கப்படுகின்றன.

இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களான ஜிசான் மற்றும் யான்பு ஆகியவற்றில் உள்ள சவுதி எண்ணெய் நிறுவனத்தின் தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பாக ஹவுதி வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஹுதெய்தாவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதன் மூலம் சவுதி அரசு இந்த மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளது. இனி வரும் காலங்களில் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதே தங்கள் முதன்மை நடவடிக்கையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *