தவெக அமைச்சரவையில் இணையும் விசிக – முஸ்லிம் லீக்!

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இணைந்துள்ளன. இதையொட்டி, இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

விசிக சார்பில் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். இதில் வன்னி அரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நேற்று (மே 21) நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்றைய இந்த நிகழ்வின் மூலம் தவெக தலைமையிலான அரசு முழுமையான கூட்டணி ஆட்சியாக உருவெடுத்துள்ளது. சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தனது பலத்தை 33 ஆக உயர்த்தியது. இன்று மேலும் இருவர் இணையும் நிலையில், அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆக உயர்கிறது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில், முதல்வர் விஜய் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று அமைச்சர்களாகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *