SIR- ல் வாக்காளர்கள் செய்ய வேண்டியது இதுதான்.. பூர்த்தி செய்வது எப்படி..?

Advertisements

SIR என்றழைக்கப்படும் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , பல முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன . இது பற்றிய ஒரு சிறப்பு பார்வையை தற்போது பார்க்கலாம் .

சிறப்பு தீவிர திருத்தமனது முதல் கட்டமாக பீகாரில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது; அதில் , எந்த மேல்முறையீடும் இல்லை. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக , நாட்டின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கவுள்ளது.

SIR – ன் படி வாக்காளர்களின் தகுதிகளாக , குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால் , இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 326-ன் படி அவர் இந்திய குடிமகன் ஆக இருக்க வேண்டும்.

குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட தொகுதியில் வழக்கமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

தகுதி நீக்கம் எந்த சட்டத்தின் படியும் செய்யப்பட்டவராக இருக்கக்கூடாது.

SIR -ன் அவசியம் என்னவென்றால் , அவர் , சட்டத்தின் படி, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் அல்லது, தேவைப்படும் போது வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட வேண்டும், மேலும் , அரசியல் கட்சிகள், வாக்காளர் பட்டியல்களின் தரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.

அதில் , ஏற்கனவே 1951 முதல் 2004 வரை மொத்தம் 8 முறை சிறப்பு தீவிர திருத்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடைசியாக 2002-2004 காலகட்டத்தில், அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு தீவிர திருத்தமானது நடைபெற்றது.

இதற்கிடையில் வாக்காளர் பட்டியல்களில் பல்வேறு மாற்றங்கள் கீழ்கண்ட காரணங்களால் ஏற்பட்டுள்ளன, அவை: தொடர்ச்சியான இடமாற்றம் இதனால் ஒரே வாக்காளர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது,  ‘இறந்த வாக்காளர்கள் நீக்கப்படாதது. வெளிநாட்டவர்களின் தவறான சேர்ப்பு போன்றவைகள் இடம்பெற்றுள்ளன .

SIR -ன் முக்கிய செயல்பாட்டாளர்கள் என்னவென்றால் ,

> ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுமார் 1,000 வாக்காளர்கள் இருப்பார்கள்.

> ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) நியமிக்கப்படுவார்.

> ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பல வாக்குச்சாவடிகள் உள்ளன.

> ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) இருப்பார்.

SIR -ன் சட்டமுறைகளின்படி அதிகாரிகள் கீழ்கண்ட பணிகளை மேற்கொள்வார்கள் ..அவைகள் என்னவென்றால் ,

1. வரைவு வாக்காளர் பட்டியலை தயாரித்தல்,

2. உரிமைகோரல் மற்றும் மறுப்புரைகளைப் பெற்று அவற்றின் மீது முடிவெடுத்தல்.

3. இறுதி வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிடுதல்.

4. ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு உதவி வாக்காளர் பதிவு அலுவலர் இருப்பார்.

5. மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வழங்கிய முடிவுக்கு எதிரான முதல் மேல்முறையீட்டை விசாரிப்பார்.

6. தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி/ மாவட்ட நிர்வாக நடுவர் வழங்கிய முடிவுக்கு எதிரான இரண்டாம் மேல்முறையீட்டை விசாரிப்பார்

வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் பணிகள் என்னவென்றால் ,

1. அக்டோபர் 27, 2025 தேதியன்று வாக்காளராக பதிவுசெய்யப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடுதல்.

2. இந்த கணக்கெடுப்பு படிவங்கள் தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள தேவையான விவரங்களை கொண்டிருக்கும்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள் என்னவென்றால் ,

1. ஒவ்வொரு தற்போதைய வாக்காளருக்கும் கணக்கெடுப்பு படிவங்களை வழங்குதல்.

2. வாக்காளர் அல்லது அவர்களின் உறவினரின் பெயரை 2002-2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் உள்ள பெயருடன் இணைத்து சரிபார்க்க உதவுவது.

3. இந்த பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வாக்காளர்களும் முந்தைய சிறப்பு தீவிர திருத்த தரவினை பெறுவதற்கு இந்திய தேர்தல் ஆணைய தரவுத்தளத்தினை அணுகலாம்

4. புதிய வாக்காளர்களை சேர்க்க படிவம் 6 மற்றும் உறுதி மொழி படிவத்தை (Declaration Form) பெற்றுக் கொண்டு, அவர்களின் பெயரை பொருத்தம் செய்வதில் உதவுவர்.

5. வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்ப உதவுவர், மேலும் அப்படிவத்தினைச் சேகரித்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்க்கு சமர்ப்பிப்பர்.

6. ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று சரிபார்ப்பர்.

7. இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியோரைக் கண்டறிவர்.

8. வாக்காளர்கள் குறிப்பாக, நகர்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிக இடம் பெயர்ந்தவர்கள் இணையதளம் மூலமாகவும் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பலாம்.

9 .கணக்கெடுப்பு படிவம் தவிர, எந்தவொரு பிற ஆவணங்களும் கணக்கெடுப்பு காலத்தில் சேகரிக்கப்பட தேவையில்லை.

10. கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது.

11. கடந்த சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் பெயர் பொருந்தாத வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்குவது.

12. அவ்வாறு அறிவிப்பு வழங்கிய இனங்களுக்கு தகுதியின் அடிப்படையில் விசாரித்து, அவர்களின் பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அல்லது நீக்கம் செய்வது குறித்து முடிவு செய்வது.

மேலும் , வாக்காளர் பதிவு அலுவலர்கள் உறுதிப்படுத்தவேண்டிய முக்கியமான வேலைகள் என்னவென்றால் , எந்த தகுதியான குடிமகனும் தவறவிடப்படக்கூடாது… எந்தத் தகுதி அற்ற நபரும் சேர்க்கப்படக்கூடாது என்பதே ஆகும் .

மேலும் , SIR -ன் முக்கிய படிநிலைகள் 6 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது . அவை களில் முதலாவதாக ,

கணக்கெடுப்பு முன் கட்டம்

> அதில் , வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

> வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் விவரங்களை முந்தைய சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உள்ள விவரங்களுடன் பொருத்தம் செய்வர்.

இரண்டாவதாக , அரசியல் கட்சிகளின் பங்கேற்றல் :

> இதில் , தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும் சந்தித்து, சிறப்பு தீவிர திருத்த செயல்முறையை விரிவாக விளக்குவார்கள்.

> அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நியமிக்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

> வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்காளர்களிடமிருந்து முறையாக நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை தினமும் சேகரித்து, ஒருநாளைக்கு அதிகபட்சம் 50 படிவங்கள் வரை சான்றளித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சமர்ப்பிக்கலாம்.

> கணக்கெடுப்பு படிவங்களை அச்சிடுதல், விநியோகித்தல், வாக்காளர் விவரங்களை பொருத்தம்/இணைப்பு செய்தல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சேகரித்தல்.

> ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்வதற்காக வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்தல்.

மூன்றாவதாக , வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு :

> கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் (Draft Rolls) சேர்க்கப்படும்.

> இல்லாதவர்கள் /இடம் பெயர்ந்தவர்கள்/ இறந்தவர்கள் / இருமுறை பதிவு செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது; அந்த விவரங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரி இணையதளத்தில் மற்றும் அரசு அலுவலகங்களில் வெளியிடப்படும்.

> வரைவு வாக்காளர் பட்டியல் அறிவிப்பை (Form-5) வெளியிடும் போது வாக்காளர் பதிவிற்கு, அடுத்த தகுதி ஏற்படுத்தும் நாட்களான ஏப்ரல் 01, ஜூலை 01 மற்றும் அக்டோபர் 01, 2026-க்கு முன்கூட்டிய விண்ணப்பங்களையும் வாக்காளர் பதிவு அலுவலர் பெறலாம்.

நான்காவதாக , அறிவிப்புகள் வழங்குதல் மற்றும் முடிவெடுத்தல் :

> கடந்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் பெயர் பொருந்தாத அல்லது இணைக்கப்படாத வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்படும்.

> அவர்கள் வாக்காளர் தகுதியை உறுதிப்படுத்த அளிக்கும் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும்.

> கடந்த சிறப்பு தீவிர திருத்ததிற்கு முன் அவர்கள் எங்கு இருந்தார்கள் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும்.

ஐந்தாவதாக , உரிமைக்கோரல்கள் மற்றும் மறுப்புரைகள்:

> இதில் , வாக்காளர் பதிவு அலுவலர்கள்/ உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்காளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அளிக்கும் உரிமைகோரல் மற்றும் மறுப்புரைகளை பெற்று அவைகளின் மீது முடிவெடுப்பர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு :

> இதில் , வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவின் மீதான முதல் மேல்முறையீட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி / மாவட்ட நிர்வாக நடுவர் தீர்மானிப்பார். மாவட்டத் தேர்தல் அதிகாரியின் முடிவின் மீதான இரண்டாம் மேல்முறையீட்டை தலைமைத் தேர்தல் அதிகாரி தீர்மானிப்பார்.

ஆறாவதாக , தன்னார்வலர்களின் நியமனம்:

> இதில் , தகுதிபெற்ற வாக்காளர்கள், குறிப்பாக முதியோர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் (PwD), வறியவர்கள் மற்றும் பிற பாதிக்கப்படும் குழுக்களை சார்ந்தவர்கள் எந்தவிதமான சிரமங்களும் எதிர்கொள்ளாமல், அவர்களுக்கு தேவையான அதிகபட்ச உதவிகள் மற்றும் வசதிகள் வழங்கப்படுவதற்காக ஆகும்.

வாக்குச்சாவடிகளின் மறுசீரமைப்பு:

> எந்த வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக் கூடாது

> அடுக்கு மாடி குடியிருப்புகள், குடியிருப்பு நலச் சங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும்.

> புதிய வாக்குச்சாவடிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

> ஒரே குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரே வாக்குச்சாவடியில் சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நேயர்களே … நாம் இப்பொழுது பார்த்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR எனப்படும் சிறப்பு தீவிர திருத்தத்தை பற்றிய பார்வையானது நம் இந்திய குடிமக்களின் வருங்கால நாட்டு நலனுக்காக இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *