தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் காற்று மாசுவின் அளவு 780-ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்த நிலையிலும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர். இந்நிலையில், தீபாவளியின்போது பட்டாசு வெடித்து சில விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகள் தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது ஏற்பட்ட தீ விபத்துகள் காரணமாக 679 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில், 110 பேர் தீக்காயம் காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் பொது மக்கள் பட்டாசுகளை வெடித்ததால், காற்றின் தரம் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கடும் புகைமூட்டம் காணப்பட்டது. சென்னையில் காற்று மாசுவின் அளவு 780-ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

