செங்கோட்டையன் விலகல் – அரசியலில் பரபரப்பு..!

Advertisements

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியதற்குப் பின் இன்று வரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை அமைச்சராகவும் இருந்தவர் செங்கோட்டையன். 1977 சட்டமன்றத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரான இவர், அதன்பின் 1980, 1985, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதன்பின் 2006 முதல் தொடர்ந்து நான்குமுறை கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் செங்கோட்டையன் முதன்முறையாக இடம்பெற்றார். 2006 முதல் 2012 வரை ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருந்தார்.

அதன்பிறகு 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவால் கட்சிப்பதவியிலும், ஆட்சியிலும் இருந்து செங்கோட்டையன் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகச் செங்கோட்டையன் மீண்டும் இடம்பெற்றார்.

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கருத்துக் கூறியதால் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அவரைப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். அதன்பின் தேவர் ஜெயந்தி விழாவில், அதிமுகவில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரைச் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். அதையடுத்துக் கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலும் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.

தமது ஆதரவாளர்களுடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக சார்பில் தேர்வான சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார். இதற்கான கடிதத்தைச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் இன்று வழங்கினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *