ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையே ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து வைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நான்கு முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் கமிஷின் ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதில் முங்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தது.
நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.
நான்கு மந்திரிகள் ராஜினாமா குறித்து அரசும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நான்கு பேருக்கு பதிலாக முக்கியமான மந்திரி பதவிக்கு புதிதாக யாரை நியமிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், உடனடியாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றத்திற்கான அந்த கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ரஷியாவுக்கு எதிராக சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த ராஜினாமா விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.