Jaipur:கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தையின் பாசப்போராட்டம்!

Advertisements

தன்னை கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை கதறி அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஜெய்ப்பூர்:உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் தனுஜ் சாஹர். தற்போது காவல்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தனுஜ் சாஹர், உத்தர பிரதேச மாநில காவல்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வரும் தனது உறவினர் ஒருவரின் 11 மாத ஆண் குழந்தையை கடத்தியுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், தனுஜ் சாஹரை வலைவீசி தேடி வந்தனர்.

அதே சமயம், தனுஜ் சாஹர் தனது தோற்றத்தை மாற்றி முழுநீள தாடியை வளர்த்துக் கொண்டார். உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் யமுனை நதிக்கரையில் குடிசை அமைத்து, துறவி போல் வேடமிட்டு வாழ்ந்து வந்துள்ளார். அவர் கடத்திச் சென்ற குழந்தையை தனது மகன் என்று கூறி அவர் வளர்த்து வந்துள்ளார்.

இதனிடையே தனுஜ் சாஹரின் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி கடந்த 27-ந்தேதி காவல்துறை சிறப்பு படையினர் தனுஜ் சாஹர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து குழந்தையையும் மீட்டனர்.

இதையடுத்து, மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் ஜெய்ப்பூர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது அந்த குழந்தை, தன்னை கடத்திச் சென்ற தனுஜ் சாஹரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுதது. தனுஜ் சாஹரும் குழந்தையை கட்டிப்பிடித்து அழத் தொடங்கினார்.

அவரிடம் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக பிரித்து அதன் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், தனுஜ் சாஹரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கைதுக்கு முன் நடந்த இந்த பாசப்போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

அதனைக் கண்ட பலர் தனுஜ் அந்த குழந்தையை நல்ல முறையில் வளர்த்துள்ளார் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், 11 மாத குழந்தையை கடத்தி, பெற்றோரிடம் இருந்து குழந்தையை 14 மாதங்கள் பிரித்து வைத்திருந்த தனுஜ் சாஹருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *