Sattur Ramachandran: இலவச வீட்டு மனை பட்டா, தொடர்ந்து வழங்கப்படும்.. அமைச்சர் உறுதி!

Advertisements

ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 22ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை தனித்தனியாகத் தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-25 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில் திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

மார்ச் மாதத்திற்குள் முதலமைச்சர் இதற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதிலளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-

மேய்க்கால் புறம்போக்கு நிலம் தொடர்பாகவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு வழங்குவது குறித்தும், ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாகச் செயல்படுத்த முடியவில்லை. அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *