
நாளை முதல் பம்பைக்கு சிறப்புப் பேருந்துகள்!
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு நாளை (நவம்பர்16) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தப் பேருந்துகள், நாளை முதல் (16-ந் தேதி முதல்) அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதிவரை இயக்கப்பட உள்ளதாகவும், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி/ கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது எனப் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
கார்த்திகை மாதம் திறக்கப்படும் அய்யப்பன் கோவில், டிசம்பர் மாதம் 27ந்தேதி (27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5 மணிவரை) கோயில் நடை சாத்தப்பட உள்ளதால், டிசம்பர் 26 முதல் டிசம்பர் 9-ம் தேதிவரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புப் பேருந்துகளை www.tnstc.in மற்றும் TNSTC Official App மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள்:
மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெறுவதற்கு 94450 14452, 94450 14424, 94450 14463 மற்றும் 94450 14416 ஆகிய செல்போன் எண்களும் உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகள் வசதிகள் மட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக வாடகை அடிப்படையிலும் பேருந்துகள் விடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோயில்களுக்குச் செல்லும் நிலையில், மகர விளக்குப் பூஜை மற்றும் மண்டல பூஜையைக் காண வழக்கத்தைவிடப் பன்மடங்கு செல்வார்கள். இதைக் கருத்தில் கொண்டு வழக்கமான பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


