வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது!
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த, 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு, வடமேற்கில் நகர்ந்து, மத்திய மேற்கு கடற்பகுதியில் நிலவும். இந்தக் காற்றழுத்தப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (நவ., 15) வலுப்பெறும். பின் ஆந்திர கடலோரத்தை ஒட்டி நகர்ந்து சென்று ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது எனச் சென்னை வானிலை மையம் கூறியிருந்தது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
நேற்று தொடர்ந்து மழை பெய்ததால், கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரே நாளில் 39 ஏரிகள் நிரம்பின. இந்த மாவட்டங்களில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 24 அடி உயரமுள்ள இந்த ஏரிக்குக் காலை 6 மணி நிலவரப்படி 22.04 அடியாக நீர்மட்டம் இருந்தது.ஏரிக்கு 301 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில் 162 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.புழல் ஏரிக்கும் நீர் வரத்து 606 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் 2,745 மில்லியன் கன அடி நீர் உள்ளது.
மாமல்லபுரத்தில் 2வது நாளாகக் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் 7 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வருவதாக மீனவர்கள் கூறியுள்ளனர். கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், உயாளிகுப்பம், கோகிலமேடு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்தது. சோழிங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதனிடையே, நேற்று சென்னை மெரினா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் 19 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கம் – 7 செ.மீ., அம்பத்தூர் – 9.5 செ.மீ., கலெக்டர் அலுவலக வளாகம் – 9.4 செ.மீ., கோடம்பாக்கம் 8.5 செ.மீ., சோழிங்கநல்லூர் -8.2 செ, மி, கேளம்பாக்கம் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.