
சீசெல்ஸ் நாட்டின் தேசிய நாள் விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவான சீசெல்ஸ் நாட்டுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று முதல் மூன்று நாட்களுக்கு அவர் அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதன்மையாக அந்நாட்டின் தேசிய நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.
இது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள பதிவில், சீசெல்ஸ் நாட்டின் தேசிய நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்நாட்டுடன் இந்தியா தூதரக உறவை ஏற்படுத்தி ஐம்பது ஆண்டுகள் ஆவதன் பொன்விழாவும் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீசெல்ஸ் நமது கடல்சார் அண்டை நாடாகும் என்றும், மகாசாகர் திட்டத்தின் முதன்மைக் கூட்டாளி என்றும் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் தான் பேச்சு நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சீசெல்ஸ் நாட்டின் தேசியச் சட்டமன்றத்தில் தான் உரையாற்ற உள்ளதாகவும், அங்குள்ள இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



