
தில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாகக் கன்னடரான வெங்கட நாராயணனை நியமித்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணையைக் கட்டினால் காவிரியில் தண்ணீர் வராமல் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். எனவே கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் காவிரி நீர்ச் சிக்கலைத் தீர்க்கப் புதிதாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் எனக் கோரித் தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் அரசு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
ஏற்கெனவே நடுவர் மன்றம் அமைத்து அதன் இறுதித் தீர்ப்பை வழங்கியும், உச்ச நீதிமன்றம் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிமையுள்ள நீரின் அளவைக் குறைத்து விட்ட நிலையில், மீண்டும் நடுவர் மன்றம் அமைத்தால் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகும் என்று விவசாயிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் தமிழக அரசின் தீர்மானத்தை ரத்துச் செய்ய வலியுறுத்திக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தீர்மான நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மான நகலை எரித்த போது தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழக அரசின் தீர்மான நகல் எரிப்புப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன், தில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாகக் கன்னடரான வெங்கட நாராயணனை நியமித்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.



