
குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று, த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், குதிரை பேரம் நடத்திய திருநாவுக்கரசு உள்பட 9 பேரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் முடிவு செய்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூபாய் 35 கோடி பேரம் என்பது யூகம்தான் என்று தெரிவித்தார். மேலும், குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா, குதிரை பேரம் எனக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளதா, திருநாவுக்கரசு, அசோக் குமார் ஒரே நாளில் ஈரோட்டில் இருந்தது ஒரு ஆதாரமா, 59 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட திமுகவால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் என பல கேள்விகளை எழுப்பிய அவர், உண்மையில் இந்த வழக்கை காவல்துறையினர்தான் பெரிதாக்கி வருகின்றனர் என்றும், இப்போது சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தால், ஆட்சியை கவிழ்க்க முடியாது என்றும், செந்தில் பாலாஜி தலைமறைவாகமாட்டார்.
விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்றும், எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு தரப்பில், சட்டமன்ற உறுப்பினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதற்கான சதித் திட்டம் சென்னையின் முக்கிய இடங்களில் தீட்டப்பட்டன என்றும், சதியை நிரூபிக்க சிசிடிவி ஆதாரங்கள் ஓட்டல்களில் இருந்தன என்றும், அவற்றில் சில காட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன என்றும் வாதிடப்பட்டது.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.




