மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா-விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தேமு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்காளர் உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும், வாக்காளர் திருத்தப்பட்டியல் தான் எஸ்.ஐ.ஆர் என்றும்,
அதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக அனைவரின் கருத்தாக உள்ளது என்றும், எனவே வாக்காளர் திருத்தப் பட்டியல் எஸ்.ஐ.ஆர்-ஐ முறையாக வெளிப்படை தன்மையோடு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதற்கோ,
அவர்களின் வாக்குரிமையை பறிக்கப்படுவதற்கோ இடமளிக்கக் கூடாது என்றும் பிரேமலதா-விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் நடைமுறையில் மக்களுக்கு முழுமையான நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் ஏற்படும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமான ஈ.வி.எம். முறையை தவிர்த்து, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா-விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.




