
சென்னை: மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் கேஸ் அடுப்பு ரிப்பேர் செய்வது, தலை முடி வாங்குவது போல் சென்று ஆளில்லாத நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 11 பேரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 24 சவரன், 2 கிலோ வெள்ளி பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில், அவ்வப்போது பகல், இரவு நேரங்களில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
இந்தச் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களைப் பிடிக்க மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் உள்ளிட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் மற்றும் அரையப்பாக்கம் பகுதிகளில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளாஸ்திரி பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கி இருந்து மதுராந்தகம் மற்றும் சித்தாமூர், அணைக்கட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கேஸ் அடுப்பு ரிப்பேர் செய்வது, தலைமுடி வாங்குவது என வீடுகளை நோட்டமிட்டு, ஆளில்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளைகள் ஈடுபட்ட 3 பெண்கள், 8 ஆண்கள் ஆகிய 11 பேரை மதுராந்தகம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து மதுராந்தகம், சித்தாமூர், அணைக்கட்டு ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட 24 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் காளாஸ்திரி பகுதியைச் சேர்ந்த கொள்ளையர்கள் துர்கா பிரசாத் (24), விக்கி (22), பிரகாஷ் (27) மற்றும் சித்தாமூர் காவல் நிலையத்தில் 4 பேர், அணைக்கட்டு காவல் நிலையத்தில் 4 பேர் என மூன்று பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

