சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்குப் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாகக் கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்தக் கொலைக்கான காரணம்குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களைப் போலீசார் குண்டுகட்டாகக் கைது செய்தனர்.
இந்தச் சூழலில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்குச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாளைப் பிற்பகல் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாகப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குத் திட்டம் போட்டுக் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆம்ஸ்ட்ராங் வீடுள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை, ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன்பிறகே இந்தக் கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது. புன்னை பாலு என்பவர் ஆற்காடு சுரேஷின் தம்பி ஆவார். கைதான புன்னை பாலு போலீசில் அளித்த வாக்குமூலத்தில், அண்ணனைக் கொன்றதோடு ஜெயபால், ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர் என்றும் தொடர் கொலை மிரட்டல் வந்ததால் என் மனைவி பயத்தில் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் திட்டமிட்டு கொலை செய்ததாகத் தெரிவித்தார்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது எனத் திட்டமிட்டு கொடூரமாகத் தீர்த்துக் கட்டியுள்ளனர். வெட்டும்போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டை வீசிக் கொலை செய்யவும் தயார் நிலையில் வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பிப் பின்புறமாக இருந்து இடது பக்கமாகக் கழுத்தில் கொலையாளிகள் வெட்டியுள்ளனர். கணுக்காலில் வெட்டியபிறகு சராமாரியாக அவரைக் கொலையாளிகள் வெட்டத் தொடங்கி உள்ளனர். கொலையாளிகள் வெட்டியதில் ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் கொலை பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையும், குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரித்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

