
திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் கனவைத் தான் நனவாக்கப் போவதாக அவர் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ஜவகர்லால் நேரு பேரனும், இந்திரா காந்தியின் மகனுமான இராஜீவ் காந்தி 1984ஆம் ஆண்டு, தனது மெய்க்காப்பாளர்களால் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்துப் பிரதமராகப் பதவியேற்றார். 1984 முதல் 1989ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த இராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு மக்களவை, தமிழ்நாடு சட்டமன்றம் ஆகியவற்றுக்குப் பொதுத்தேர்தல் நடைபெற்றபோது மே 21ஆம் நாள் திருப்பெரும்புதூரில் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மனிதவெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
அதன் 35ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று தன் தந்தையின் வாழ்வை ராகுல்காந்தி நினைவுகூர்ந்துள்ளார். அதில் திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் தன் தந்தையின் கனவை நனவாக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் போதனைகள், அவரின் விழுமியங்கள், அவரின் நினைவுகள் எப்போதும் தன்னுடன் இருக்கும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாகக் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரும், பிரியங்காவின் குழந்தைகளும் தில்லியில் உள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடமான வீர்பூமியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.




