
பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்தந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதுடன், இரு நாடுகள் இடையான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உடன்பாடு செய்துகொண்டார்.
இதேபோல் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த நார்டிக் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். தனது பயணத்தின் கடைசி இலக்காக இத்தாலியிலும் பல்வேறு உடன்பாடுகளைச் செய்துகொண்டார். அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் இன்று தில்லிக்கு வந்திறங்கினார்.
பிரதமர் மோடி தனது பயணத்தின்போது இத்தாலி அதிபருக்குப் பண்டிட் பீம்சென் ஜோசி, எம்எஸ் சுப்புலட்சுமி, ஆகியோரின் இசைத் தொகுப்புகள் அடங்கிய சிடியை வைத்துப் பரிசளித்துள்ளார்.
இதேபோல் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குநர் கு டோங்கியுக்கு இந்தியாவின் பாலக்காட்டில் விளைந்த சிவப்புச் சம்பா அரிசி, வங்கத்தின் கோவிந்தப்போகம் அரிசி, பாசுமதி அரிசி, அசாமில் விளைந்த சாலி அரிசி உள்ளிட்டவற்றைப் பரிசாக அளித்தார்.
இதேபோல் சிறுதானியங்களால் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்களையும் பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிப் பயணத்தின்போது அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு அசாமின் தங்கப்பட்டுச் சேலையைப் பரிசளித்துள்ளார். இதேபோல் மணிப்பூரில் நெய்த பட்டுத் துணியையும் பரிசாக அளித்துள்ளார்.


