ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. 200 தொகுதிகள் உள்ளன. அகில இந்திய காங்கிரஸ், பாஜக இரண்டும் முக்கிய கட்சியாக இருந்தாலும், ராஷ்டிரிய லோக் தன்ட்ரிக், மாயாவதியின் பஹுஜன் சமாஜ் கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன.
ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் மும்மரமாகத் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வீசி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.
மாவட்டந்தோறும் மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்படும், மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக Anti Romeo படைகள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன் சேமிப்புப் பத்திரம் வழங்கப்படும் என்றும், ஏழைப் பெண்களுக்குச் சமையல் எரிவாயு சிலிண்டர் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும், 5 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி, ஐந்து ஆண்டுகளில் 2,50,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு மழலையர் கல்வி முதல் முதுகலை படிப்புவரை இலவசக் கல்வி, 12 ஆம் வகுப்புப் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளரும், மத்திய அமைச்சருமான அர்ஜூன்ராம் மேக்வால் தேர்தல் அறிக்கைகுறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், “கட்சியின் நிகழ்ச்சிகளான ஆகன்ஷா பெட்டி, மின்னஞ்சல், சமூக ஊடகங்கள்மூலம் பெறப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு பாஜகவின் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.