Suratha Birthday: சுரதா பிறந்த தினம் இன்று!

Advertisements

கவிதைக்கு அழகு சேர்க்கும் உமைகளை தன் கற்பனைத்  திறனால் கவிதைகளில் புகுத்தி உவமைக்கவிஞர் என்று பெயர் பெற்ற தமிழ்க் கவிஞர் சுரதா அவர்களின் பிறந்த தினம் இன்று..

இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்ற இவரது வரிகள் மிகவும் புகழ்பெற்றது.  அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’, மற்றும் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’ போன்ற புகழ் பெற்ற பாடல்களை இயற்றியவர்.

கவியரங்கங்கக் கவிஞர் அவர். அவரது படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம்  மிகவும் புகழ் பெற்றவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றிய புதுமைவாதி.

சுரதா தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகளை  இயற்றியவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதி வந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர், சிக்கல் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-செண்பகம் அம்மையார் ஆவர். பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

1941 ஜனவரி 14-இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.   அரசவைக் கவிஞராக இருந்த நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் உதவியாளராக இருந்தார்.

தலைவன் இதழின் துணை ஆசிரியராகவும், கதைகள் கவிதைகள்,கவிதைகள் எழுதி வெளியிட்டார். திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

அதுமட்டுமல்ல திரை வானிலும் ஜொலித்தார் சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். 100 -க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். 1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைத் தொகுப்பு  `சுவரும் சுண்ணாம்பும்’ என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது .

பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 1972 கலைமாமணி விருது,  பாவேந்தர் பாரதிதாசன் விருது, கவியரசர் பட்டம்  மகாகவி குமரன் ஆசான் விருது, இராசராசன் விருது  ஆகியவை வழங்கப்பட்டது. 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச் சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது.

இவர் தன்னுடைய 84ம் வயதில் 2006 சூன் 20 செவ்வாய்க்கிழமை அன்று, சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் சுரதாவின் படைப்புகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *