
எதிர்காலத்தில் ஹைட்ரஜன் இரயில்கள் குறித்துப் பேசும் போதெல்லாம் ஜிந்த், சோனிபட், ஹரியானா ஆகிய பெயர்கள் வரலாற்றில் நீங்காமல் இடம்பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் ஜிந்த் பகுதியில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜனால் இயங்கும் இரயிலை ஜிந்திலிருந்து சோனிபட் வரை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, அவர் குருக்ஷேத்திரத்தில் அமையவுள்ள சீக்கியர் அருங்காட்சியகம், 24.27 கிலோ மீட்டர் நீளமுள்ள ஹான்சி-பார்வாலா பிரவுன்பீல்ட் நெடுஞ்சாலைத் திட்டம், மேம்பால இரயில் பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கானப் பணிகளைக் காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின்’ திட்டத்தின் பயனாளிகளுக்கு வீட்டுச் சாவிகளை வழங்கினார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தன்னைத் பொறுத்தவரை, ஜிந்த் நகருக்கு வருகைத் தருவது என்பது நெஞ்சிற்கு இனிய நினைவுகளை மறுபடியும் அசைபோடுவது போன்றதாகும் என்று தெரிவித்தார். மேலும், இன்று இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில் இந்த மண்ணிலிருந்து தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் இரயில் மும்பை – புனே இடையே இயங்கியதை நாம் இன்றும் வரலாற்றில் படித்து வருவதாகக் கூறினார். அதேபோல் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் இரயில்கள் குறித்துப் பேசும் போதெல்லாம் ஜிந்த், சோனிபட் மற்றும் ஹரியானா ஆகிய பெயர்கள் வரலாற்றில் நீங்காமல் இடம்பெறும் என்று குறிப்பிட்டார்.


