போராட்டக்காரர்களுக்கு நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற ராகுல்!

போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்துத் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சித் தொண்டர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மீது ஜூலை 20ஆம் நாள் காவல்துறை தாக்குதல் நடத்தியது. அப்போது கூட்டத்தைக் கலைக்க ரப்பர் குண்டுகள் சுடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள காவல்நிலையத்துக்குச் சென்றார். அங்குக் காவல் துணை ஆணையரிடம் அவர் ஒரு புகார் மனுவை வழங்கினார். அவருடன் ரப்பர் குண்டு சுடப்பட்டதால் காயமடைந்த சகில் லோச்சவ், நாடாளுமன்ற உறுப்பினர் குமரி செல்ஜா உள்ளிட்டோர் இருந்தனர்.

போராட்டத்தின் போது தன் மீது ரப்பர் குண்டுகள் சுடப்பட்டது குறித்து சகில் லோச்சவ் ஆகஸ்டு 14ஆம் நாள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருந்தார். அப்போது அவரின் புகாரை ஏற்கக் காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இந்நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியுடன் சென்று அவர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *