
புதுச்சேரியில் இந்திரா சதுக்கம், இராஜீவ்காந்தி சதுக்கம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு 436 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நால்வழிச் சாலையாக அமைக்கப்பட உள்ள இந்த மேம்பாலம் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு இப்போதுள்ள தேசிய நெடுஞ்சாலையின் மீது கட்டப்படும் என்றும், இதில் விழுப்புரம் திண்டிவனம் சாலைகள், பேருந்து நிலையம் ஆகியவற்றை அடையும் வகையில் நடந்து செல்வோருக்கான நடைமேம்பாலமும் அமைக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னை, மாமல்லபுரம், திண்டிவனம், விழுப்புரம், கடலூர் ஆகிய நகரங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இது அமையும் என்றும், இதனால் நடப்போருக்கும், வாகனப் பயனாளர்களுக்கும் பாதுகாப்பான சூழல் அமைவது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.



