ஆதரவு உண்டு, ஆனால் சமரசமில்லை..தவெக அரசுக்கு சிபிஐ கொடுத்த எச்சரிக்கை.!  

தவெக அரசுக்கு ஆதரவு அளித்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட பெரும் மாற்றமாகக் கருதப்படுகிறது. அதேவேளையில், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, வரும் ஜூன் 29-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு சிபிஐ அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அரசியல் நகர்வின் பின்னணியை வீரபாண்டியன் விரிவாக விளக்கியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றபோது, ஜனநாயக மரபுகளைக் காற்றில் பறக்கவிட்டு, ஜனாதிபதி ஆட்சி அல்லது மறைமுக பா.ஜ.க. ஆட்சியைத் திணிக்க சில சக்திகள் முயற்சித்தன. அதை எல்லாம் தடுக்கும் நோக்கில் மட்டுமே தவெக அரசுக்கு சிபிஐ ஆதரவு அளித்தது. இது யாரையும் கேட்டு எடுத்த முடிவல்ல, மாறாக கொள்கை சார்ந்தது.

உழைக்கும் மக்களின் நலன், சமூக நீதி, மதச்சார்பின்மை இதை எல்லாம் காப்பது தான் கட்சியின் நோக்கம். இந்த நிபந்தனைகளுடன் ஆதரவை அளித்த சிபிஐ, ஆட்சியில் பங்கெடுக்க மறுத்து, வெளியே இருந்து கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடுத்த உறுதிமொழிகளின் மீதான நம்பிக்கையிலேயே இந்த ஆதரவு தொடர்கிறது.

ஆனால், அரசு தனது கொள்கை நிலையிலிருந்து மாறினால், பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து போராடுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்பதை சிபிஐ இப்போது உறுதிபடக் கூறியுள்ளது. தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், தமிழகத்தின் தற்போதைய சூழலில் ஒரு தன்னாட்சி பெற்ற சக்தியாகச் செயல்பட வேண்டிய தேவை இருப்பதாக சிபிஐ கருதுகிறது.

மத்திய அரசு, ஜனநாயக நிறுவனங்களான தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களை தன்வயப்படுத்தி, மாநில உரிமைகளைப் பறிப்பதாக சிபிஐ குற்றஞ்சாட்டுகிறது.. இந்த ‘பாசிச சர்வாதிகார’ சூழலுக்கு எதிராக, இடதுசாரி ஒற்றுமையையும் முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்பதே சிபிஐ-யின் அடுத்தகட்ட அரசியல் திட்டம்.

இந்த அரசியல் தெளிவோடு, மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக ஜூன் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஐந்து முக்கியக் கோரிக்கைகளை சிபிஐ பட்டியலிடுகிறது.. அவை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் அல்லாடுகின்றனர். இதைக் குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள நான்கு புதிய சட்டத் தொகுப்புகளைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது என அரசு அறிவிக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை ரத்து செய்து, விபி கிராம்ஜி என்ற புதிய திட்டத்தை திணிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஐந்து ஏக்கர் என்ற நிபந்தனையை நீக்கி, தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தவெக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி, ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கும் பணிகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

இந்த ஐந்து கோரிக்கைகளும் தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்போடு தொடர்புடையவை. வரும் ஜூன் 29-ஆம் தேதி, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தப் போராட்டம், ஆளும் அரசுக்குக் கொடுக்கப்படும் ஒரு ஜனநாயக ரீதியான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டால், தங்களை ஆதரித்த சக்திகளே தங்களுக்கு எதிராகக் களமிறங்கும் என்பதை சிபிஐ-யின் இந்த அறிவிப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசியல் களம் இப்போது ஒரு புதிய போராட்டக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறதுதான்சொல்லணும்.

தேர்தல் களத்தில் கைகுலுக்கிய சக்திகள், இப்போது கொள்கை மோதலில் நேருக்கு நேர் நிற்கத் தொடங்கியுள்ளன. இனி தவெக அரசுக்குச் சோதனை காலம் தான், தவெக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா அல்லது வீதியில் இறங்கிப் போராடுவாங்களா? பொறுத்திருந்து பார்ப்போம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *