
திருவோணத் திருநாளையொட்டி மலையாள மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த ஓணத் திருநாள் மக்களுக்கு மகிழ்ச்சி, நல்ல உடல்நலம், செழிப்பு ஆகியவற்றைத் தரட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரளத்தின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் ஓணத் திருவிழா காட்டுவதாகவும், இது ஒற்றுமை, பண்பாட்டுப் பெருமை ஆகியவற்றின் அடையாளமாக விளங்குவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாள மக்களுக்கு மலையாள மொழியில் ஓணத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மக்களின் நினைவாகவே வாழ்ந்த மன்னன் மாவலியின் வாழ்க்கை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடவுளின் பூமி என்றும், இயற்கையின் சொர்க்கம் என்றும் போற்றப்படும் கேரளம் வளம் கொழிக்க வேண்டும்; கேரள மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.



