
நாக்பூர்: பான் மசாலா போட்டுச் சாலையில் எச்சில் துப்புபவர்களை போட்டோ எடுத்துச் செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
அப்போது, நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து விட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்கள், அதன் கவரை உடனே தூக்கி வீசி விடுகிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் சாக்லேட்டை சாப்பிட்டு விட்டு, கவரை தூக்கியெறியாமல், தங்களின் பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றனர்.
முன்பெல்லாம் நானே, காரில் செல்லும்போது சாக்லேட்டை சாப்பிட்டு விட்டு, அதன் கவரை வெளியே தூக்கி எறிந்து விடுவேன். ஆனால், தற்போது, அப்படி செய்வதில்லை. சாக்லேட்டை சாப்பிட்டால், கவரை வீட்டுக்குச் சென்று குப்பைத் தொட்டியில் தான் போடுகிறேன்.
பொது இடங்களில் பான் மசாலா போட்டு விட்டு, எச்சில் துப்புபவர்களை போட்டோ எடுத்து, அதனைச் செய்தித்தாளில் வெளியிட்டால், அசுத்தம் செய்பவர்கள் யார் என்று பொதுமக்களுக்குத் தெரிய வரும். மகாத்மா காந்தி இது போன்று தான் செய்தார், என்று கூறினார்.


