
புதுடெல்லி:
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரிச்சட்டம் 1961, 60 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. இதில் பல ஆண்டுகளாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனால் அதில் சில சிக்கல்களும் ஏற்பட்டன.
எனவே புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தப் புதிய மசோதாவுக்கு மத்திய மந்திரி சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய வருமான வரி மசோதா 2025, பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காகப் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய வருமான வரி மசோதாவின் சிறப்பு அம்சங்கள்குறித்து அதிகாரிகள் கூறியது,
வருமான வரிச் சட்டம் 1961-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘முந்தைய ஆண்டு’ என்ற வார்த்தையை, புதிய வருமானவரி மசோதாவில் ‘வரி ஆண்டு’ என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது, முந்தைய ஆண்டில் (2023-24) ஈட்டிய வருமானத்திற்கு, மதிப்பீட்டு ஆண்டில் (2024-25) வரி செலுத்தப்படுகிறது.
இந்த முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்து நீக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்ட மசோதாவின் கீழ் வரி ஆண்டு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது.
மொழியை எளிமைப்படுத்துவதற்காகவே வடிவைமைக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதா 536 பிரிவுகள் உள்ளன. (தற்போதைய வருமான வரிச் சட்டத்தில் 298 பிரிவுகள் உள்ளன).
தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ளன, அவை புதிய சட்டத்தில் 16-ஆக அதிகரிக்கும்.
இருப்பினும் 23 அத்தியாயங்களே இருக்கும். அதே நேரம் புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும்.
வருமான வரிச் சட்டம், 1961 கொண்டு வரப்பட்டபோது, 880 பக்கங்களைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, குறைக்கப்பட்ட வரி தகராறுகளுக்கு பங்கு விருப்பத்தேர்வுகள் மீதான தெளிவான வரிவிதிப்பு சேர்க்கப்பட்டுள்ளது,
”வருமான வரிச் சட்டம் 1961-ல் வருமான வரித்துறை பல்வேறு நடைமுறை விஷயங்கள், வரித் திட்டங்கள் மற்றும் இணக்க கட்டமைப்புகளுக்குப் பாராளுமன்றத்தை அணுக வேண்டியிருந்தது.
இப்போது, மத்திய நேரடி வரிகள் வாரியம் அத்தகைய திட்டங்களைத் தாமாகவே அறிமுகப்படுத்த அதிகாரம் பெற்றுள்ளது, இது வரி நிர்வாகத்தை மேலும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது.
