
வேலூரில் உள்ள தங்கக்கோவிலுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாளை வருகைத் தர உள்ளார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இன்று முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை கர்நாடகம், தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், நாளை தமிழகத்தின் வேலூரில் உள்ள தங்கக்கோவிலுக்கு வருகிறார்.
அப்போது, அவர் புதியதாகக் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தைத் திறந்து வைத்து தரிசனம் செய்ய உள்ளார். தொடர்ந்து, அவர் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு செல்கிறார். இதையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கோவில் வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




