
நாடாளுமன்றத்துக்குப் புதிதாக வரும் உறுப்பினர்கள் மூத்த தலைவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பதவிக்காலம் முடியும் உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் முடிந்து அவையை விட்டு வெளியேறுவதுடன் தலைவர்களின் பொதுவாழ்வு முடிந்து விடாது என்றும், அரசியல் வாழ்வுக்கு முற்றுப் புள்ளியே இல்லை என்றும் கூறினார்.
தேவகவுடா, மல்லிகார்ச்சுன் கார்கே, சரத் பவார் ஆகிய மூத்த தலைவர்கள் தங்கள் வாழ்நாளின் பாதிக்கு மேல் நாடாளுமன்றத்தில் பணியாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதவாலே பதவியில் இருந்து ஓய்வுபெற்றாலும் நையாண்டி, நகைச்சுவை உணர்வுடன் தொடர்ந்து பணியாற்றுவார் என்று பிரதமர் மோடி கூறினார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே பேசும்போது, நாட்டுக்குத் தொண்டாற்ற அரசியலிலும் பொதுவாழ்விலும் ஈடுபட்டுள்ளோருக்கு ஓய்வு என்பதே கிடையாது என்று கூறினார்.


