
இயற்கை வளங்களைக் காப்பதற்காக மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வெளியாகும் கழிவுகளைச் சாலை அமைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் ஆசியன் கல்விக் குழுமத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது, தில்லியில் மாநகராட்சிக் கழிவுகள் நான்கு இடங்களில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அவற்றைப் பிரித்தெடுத்து 80 இலட்சம் டன் கழிவுகளைச் சாலை அமைப்பதற்குப் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்பை அரசு தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
தில்லி – மும்பை விரைவு நெடுஞ்சாலை, தில்லி – டேராடூன் விரைவு நெடுஞ்சாலை ஆகியவற்றைக் கட்டமைத்தபோது பல பகுதிகளில் கழிவுகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார். மாநகராட்சிக் கழிவுகளைச் சாலை அமைக்கப் பயன்படுத்துவதால் இயற்கை வளங்களை மொத்தமாக அழித்துப் பயன்படுத்த வேண்டி இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.



