
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த நீர்வள அமைச்சகம் திட்டமிடுவதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உழவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து எடுக்கும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படுமா? வரியின் அளவு எவ்வளவாக இருக்கும்? என்று வினவியுள்ள அன்புமணி, எப்படியிருந்தாலும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் தத்துவம் அடிப்படையிலேயே தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரும்பாடு பட்டு நிலத்தடி நீரை எடுக்கும் எந்த உழவரும் அதை வீணாக்க மாட்டார்கள் என்றும், அதற்கு வரி விதிப்பது சரியானதாக இருக்காது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
விளைபொருள்களுக்குப் போதிய விலையின்மை, உரங்களின் விலை உயர்வு, சந்தை வசதிகள் இல்லாதது என ஏற்கெனவே உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய ஆபத்தான திட்டத்தைத் தொடக்க நிலையிலேயே மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

