
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூவரையும் ஜூலை ஒன்றாம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தெற்குக் கொல்கத்தா சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி, இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவன் ஒருவனும், இப்போது பயின்ற மூத்த மாணவர் இருவரும் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் ஒரு தேர்வுக்காகப் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வந்த தன்னைக் கல்லூரி நேரத்துக்குப் பின் மாணவர் சங்க அலுவலகத்தில் அமர வைத்ததாகவும், இப்போது வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர் தன்னை வன்கொடுமை செய்ததாகவும், மூத்த மாணவர் இருவரும் அதைச் செல்பேசியில் படம் பிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொடுமையை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவதாகக் கூறி மூவரும் மிரட்டியதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். மூச்சுத் திணறுவதாகக் கூறியும் விடாத அவர்கள் இரவு பதினொரு மணி வரை அடைத்து வைத்துத் துன்புறுத்தியதாகவும் அந்த மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்த கொல்கத்தா காவல்துறையினர் குற்றவாளிகளான மனோசித் மிஸ்ரா, சாயிப் அகமது, பிரமித் மகோபாத்யாய் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். மூவரையும் ஜூலை ஒன்றாம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்துக் கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ்குமார் வர்மா தலைமையிலான காவல்படையினர் குற்றவாளிகள் மூவரையும் நேற்றிரவு கல்லூரிக்கு அழைத்து வந்து குற்றம் நிகழ்த்தப்பட்ட இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.


