உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்குள்ள விடுதியில் இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தாஷ்கண்டில் உள்ள இந்திய சமூகத்தினரின் அன்பையும் பாசத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார். நமது புலம்பெயர் சமூகம், இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ஒரு உயிருள்ள பாலமாக திகழ்ந்து, நமது நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இந்தியர்களின் கதக் மற்றும் அண்டிஜன் போல்கா நடன நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். மேலும் அவர், தப்லாவுடன் பாரம்பரிய உஸ்பெக் இசைக்கருவிகளான டோய்ரா மற்றும் சாங் ஆகியவை இணைந்து வழங்கிய ஒரு வசீகரிக்கும் இசைக் கலவையையும் கண்டு ரசித்தார்.
இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


