3 வது அணிக்கு அச்சாரம்.. ராமதாஸ், சசிகலா போடும் புது ரூட்..!

Advertisements
தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஓரளவு முடிவாகி விட்டன. தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்ற அரசியல் கணக்குகளில் ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி தலைமையிலான அணிக்கான தொகுதிகள் பற்றி அதிமுக, பாஜகவுடன் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி முடிவை எடுக்க முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறார்..திமுக கூட்டணியில் தேமுதிக இணைய தங்களுக்கான கதவு அடைக்கப்பட ஏமாற்றமடைந்த ராமதாஸ், அன்புமணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அதிமுக மற்றும் பாஜவுக்கு தூது விட்டு பார்த்தார். ஆனால் இரு கட்சிகளும் பிடி கொடுக்கவில்லை என தெரிகிறது. தவெக புதிய கட்சி என்பதால் சீனியர் அரசியல்வாதியான ராமதாசுக்கு கூட்டணிக்காக கீழே இறங்கி வர மனமில்லை.
இதனால் கூட்டணியை இன்னும் 2 நாளில் அறிவிப்பேன் என கடந்த வாரம் தெரிவித்திருந்த ராமதாசால் எந்த அறிவிப்பும் வெளியிட முடியாத நிலை ஏற்பட, அவர் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகின. அதேபோல் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கடந்த ஒருவாரமாக தைலாபுரம் வருகையை தவிர்த்ததால் விரக்தியின் வெளிப்பாடா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தன.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சசிகலா நேற்று முன்தினம் 8.30 மணியளவில் திடீரென தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தார். அங்கு பாமக நிறுவனர் ராமதாசை, ஒன்றரை மணி நேரம் அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது செயல் தலைவர் காந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் பரந்தாமன் ஆகியோரும் உடனிருந்தனர்.
மரியாதை நிமித்தமான, உடல்நலம் விசாரிக்கும் சந்திப்பு என இருதரப்பிலும் கூறப்பட்டாலும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி வருகின்றன. தான் முதல்வராக்கிய பழனிசாமியே, தன் முதுகில் குத்த அரசியலில் தனிமைப்படுத்தப்பட்ட சசிகலாவும், தான் வளர்த்தெடுத்த மகனே தனக்கு எதிராக செயல்பட்டு கட்சியை பறித்ததோடு கூட்டணி அமைக்க முடியாத நிலைக்கு தள்ளிய விரக்தியில் உள்ள ராமதாசும் கைகோர்த்து 2 துரோகிகளையும் அரசியலில் இருந்து வீழ்த்தும் வகையில் வரும் பொதுத்தேர்தலை சந்திப்பது குறித்து பேசியதாகவும் கூறப்படுகின்றன.
அத்தோடு தங்களை அரசியலில் இருந்து ஓரங்கட்ட திரைமறைவில் பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கும் பாஜகவுக்கும் பாடம் கற்பிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக தற்போது தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெக விஜய் உள்ள நிலையில் அவருடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. நடிகர் விஜயிடம் இளைஞர்கள், தலித் வாக்குகள் அதிகமாக உள்ள நிலையில் வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்தில் செல்வாக்குமிக்க ராமதாஸ், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் செல்வாக்குமிக்க சசிகலா ஆகியோருடன், தனித்து விடப்பட்டுள்ள புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமியையும் சேர்த்து புதிய அணியாக பயணிக்கும் முடிவு பற்றியும் இருவரும் விவாதித்தாகவும் அக்கட்சிகள் வட்டாரத்தில் தகவல்கள் கசிகின்றன.
தனக்கான கடைசி அரசியல் கூட்டணி இதுவாக இருப்பதால் ராமதாசும் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவே தெரிகிறது. இருப்பினும் இதுபற்றி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டு கூட்டணி அறிவிப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார். தற்போது சசிகலா, செங்கோட்டையன் மூலமாக நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சு நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிபடுத்தும் வகையில் தனித்து விடப்பட்டிருந்த ராமதாசை, தவெகவுடன் ஒருங்கிணைக்கும் வகையில் சசிகலா பேசிவிட்டு சென்றிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *