
புதுடில்லி: யோகா, சிறு தானிய உணவுகளை ஊக்குவிப்பதன் மூலம், முழுமையான ஆரோக்கியத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாகக் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்குப் பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: அடிமட்ட அளவில் ஜனநாயக நிறுவனங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில், முழுமையான ஆரோக்கியத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்காக யோகா மற்றும் சிறு தானிய உணவுகளைப் பிரபலப்படுத்த வேண்டும்.
அங்கன்வாடிகள், சமுதாய கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பள்ளிகளில் யோகா சார்ந்த நிகழ்ச்சிகளைத் துவக்கி, மக்களைக் கவர வேண்டும். இதன் மூலம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட உலக நாடுகள் தயாராகி வருகின்றன. நமது வாழ்க்கையில், யோகா ஏற்படுத்திய நேர்மறையான மாற்றங்களினாலும், சர்வதேச சமூகத்தில் யோகாவின் தாக்கத்தினாலும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
நமது மனதிற்கும், உடலுக்கும் யோகா அத்தியாவசியம் ஆனது போல், சிறு தானிய உணவுகளும், ஊட்டச்சத்துமூலம் நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது. அவை, நமது மண்ணின் வளத்தைப் பாதுகாப்பதுடன், பருவ நிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுகிறது. சிறு தானிய உணவுகளுக்கான தேவை அதிகரிப்பால், நமது சிறு விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மீண்டும் மன் கி பாத்
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாகப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். சில மாதங்களாகத் தேர்தல் காரணமாக இந்நிகழ்ச்சி இடம்பெறவில்லை. 3வது முறையாகப் பிரதமராக மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து இம்மாதம் 30ம் தேதி இந்நிகழ்ச்சி மீண்டும் துவங்குகிறது. இதற்காக எண்ணங்கள் மற்றும் கருத்துகளை நமோ செயலிமூலம் பகிர்ந்து கொள்ளும்படி மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
