Thuthukudi : குலசேகரப்பட்டினத்தில் தொடங்கியது தசரா திருவிழா.!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது . இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூர் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாகத் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும்.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலையில் யானையின் மீது கொடிப்பட்டத்தை வைத்து நான்கு வீதிகளில் வலம் வந்தனர். அதன்பின் கோவிலுக்குக் கொடிப்பட்டம் கொண்டுவரப்பட்டு அங்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டுக் கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றும் போது அங்குக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பினர். செப்புக் கொடி மரத்துக்குத் தர்ப்பைப் புல் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுப் பின்னர் 16 வகையான பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டது. அதன்பின் கொடி மரத்துக்குத் தீபாராதனை நடைபெற்றது.

இந்தக் கொடியேற்ற விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நோன்பிருக்கும் பக்தர்கள் காப்புக் கயிறு கட்டிக் கொண்டனர். தசரா திருவிழாவின் சூரசம்காரம் அக்டோபர் இரண்டாம் நாள் நள்ளிரவு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *