
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியென மூன்று நதிகள் சங்கமமாகும் இடம் திரிவேணி சங்கமம் – இந்துக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
மகா கும்பமேளாவின்போது, குறிப்பாக மௌனி அமாவாசை போன்ற சிறப்பு நீராடும் நாட்களில் அதில் நீராடுவது மக்களின் பாவங்களைக் கழுவி, அவர்களுக்கு ‘மோட்சம்’ அல்லது முக்தியை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில், மௌனி அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், “உ.பி. பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நடந்த துயர சம்பவம் வருத்தமளிக்கிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் தற்போதுவரை மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகவில்லை.
ஏராளமானோர் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கைகுறித்து உபி. மாநில அரசு இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
