
டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர், மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபனில் பதக்கம் வென்றார். பிப்ரவரியில் டோக்கியோவில் தங்கப் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு எனத் தெரிவித்தார்.
மெல்போர்னில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இரண்டாவது முறையாகப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்வி சேகர் சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்குப் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் பிரித்வி சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இரண்டு முறை வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும் அதிகமாகப் பயிற்சி செய்து அடுத்த வருடமும் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவேன். ஆஸ்திரேலியா வீரர்களுடன் விளையாடியது சற்று கடினமாகத் தான் இருந்தது.
உடல் அளவிலும் அதிக பயிற்சி தேவைப்படுவதால் அதில் கவனம் செலுத்துவேன்.
இதே போன்று இந்தியாவை ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற வைக்க வேண்டும். 10 நாடுகள் பங்கேற்றதில் கடினமான சூழலிலும் முயற்சியோடு போராடினேன்.
அப்பா, அம்மா சிறுவயதில் இருந்தே எனக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக இருந்தனர். வரும் பிப்ரவரி மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு” எனத் தெரிவித்தார்.
