X.E.C. Corona:புதிதாகப் பரவும் `எக்ஸ்.இ.சி.’ வகை கொரோனா: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

கொரோனா தொற்று பல்வேறு திரிபுகளாக மாறித் தொடர்ந்து பரவி வருகிறது. தற்போது புதிய வகை கொரோனாவான ‘எக்ஸ்.இ.சி.’ 27 நாடுகளில் பரவி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவும் இந்த வகை கொரோனா, ஏற்கெனவே வந்த ஒமைக்ரான் திரிபுகள் கே.எஸ்.1.1 மற்றும் கே.பி.3.3 ஆகியவை இணைந்த கலவையாக உள்ளது. இது விரைவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கொரோனா திரிபாக மாறலாமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் புதிய வகை கொரோனா ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க் உள்பட பல நாடுகளில் பரவத் தொடங்கியது. இது குளிர்காலத்தில் வேகமாகப் பரவலாம் எனவும், தடுப்பூசிகள்மூலம் இதைத் தடுக்க முடியும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுக்கல் மற்றும் சீனா உள்பட 27 நாடுகளில் 500 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் எக்ஸ்.இ.சி. வகை புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன் பல்கலைக்கழகத்தின் மரபியல் மைய இயக்குனர் பிரான்காயிஸ் பாலக்ஸ் கூறுகையில், ‘எக்ஸ்.இ.சி. எனப்படும் புதிய வகை கொரோனா வேகமாகப் பரவும் திறனுடையது. ஆனால் இதைத் தடுப்பூசிமூலம் தடுக்க முடியும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *