
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி அவருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மிகச் சிறந்த தலைமைப் பண்பாலும், கடின உழைப்பாலும், நாட்டின் உயரிய இலக்குகளை அடையும் பண்பாட்டை அவர் உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் வழிகாட்டுதலில் உலகச் சமுதாயமே நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று தான் ஐந்து குருத்துவாராக்களில் வேண்டிக்கொண்டதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்திய திட்டங்களால் இந்தியா 4 இலட்சத்து 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடன் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகத் திகழ்வதாக ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது வாழ்த்துச் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்குத் தொண்டாற்றுவதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசு நலத்திட்டங்களின் பயன்கள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்ய அவர் பாடுபட்டு வருவதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று பூரி ஜெகன்நாதர் கோவிலில் தான் வேண்டிக்கொண்டதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி ஒடிசாவின் பூரிக் கடற்கரையில் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
இதை அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பார்த்துச் செல்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி அகமதாபாத்தின் மணிநகரில் பூக்களால் இந்திய வரைபடத்தை வரைந்துள்ளதுடன் கர்பா நடனமாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அமுல்பட், கவுன்சிலர் கரண் பட் ஆகியோரும் கலந்துகொண்டு நடனமாடினர்.
குஜராத்தின் சூரத்தில் மிகப்பெரிய தேசியக் கொடியையும், பிரதமர் மோடி உருவப்படம் பொறித்த மிகப்பெரிய பதாகையையும் தயாரித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறியதுடன், உக்ரைன் சிக்கலைத் தீர்க்க ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதை அவர் தனது டுருத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.



