புதுடில்லி: ‘ஊழலற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும்’ என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பியூஷ் கோயல் கூறியதாவது: ஊழலை ஒழிப்பதில் பா.ஜ., அர்ப்பணிப்பு உடன் செயல்பட்டது. ஊழலற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஊழலில் ஈடுபடுபவர்களாகவும், அதனைப் பாதுகாக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மும்பை மேற்கு தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டது. இதன் காரணமாக நாட்டின் அனைத்து மக்களும் பயன் அடைந்து இருக்கிறார்கள்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்காலத்தில் பா.ஜ., வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்கிறீர்கள். நாட்டைக் கொள்ளையடித்தவர்களை, மிகப் பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றியவர்களை பா.ஜ., ஒருபோதும் வரவேற்காது. ஊழலை ஒழிக்க வேண்டுமானால், அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
இதனை நாம் உறுதி செய்ய வேண்டும். ஊழலை ஒழிக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் விசாரணை அமைப்புகள் மிகவும் முக்கியமானது. சுதந்திரமாக இயங்கும் விசாரணை அமைப்புகள் தங்கள் வேலையை சிறப்பாகச் செய்து கொண்டிருக்கின்றன. இண்டியா கூட்டணியினர் பிரதமர் வேட்பாளரை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.

