மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களுள் 28 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதேபோல் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக மொத்தம் 51 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீதான பரிசீலனை 17-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தவெக வேட்பாளர் சத்தியபாமா, திமுக வேட்பாளர் சுகன்யா, அதிமுக வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட 22 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். எனவே இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.


