EPS: தரமற்ற பஸ்களுக்கு பிங்க் நிற பெயிண்ட்… இ.பி.எஸ் விளாசல்!

Advertisements

தரமற்ற பஸ்களுக்கு பிங்க் நிற பெயிண்ட் பூசி “மகளிர் இலவச பஸ்” என்ற பெயரில் திமுக அரசு இயக்கி வருகிறது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை: இது குறித்து இ.பி.எஸ்., கூறியிருப்பதாவது: சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பஸ்சில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பஸ்களையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பஸ்களுக்கெல்லாம் பிங்க் நிற பெயிண்ட் பூசி “மகளிர் இலவச பஸ்” என்ற பெயரில் இயக்கி பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் திமுக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி, மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை. மக்கள் இவர்கள் ஆட்சியில் உயிர்பிழைத்து வாழ்வதே சாதனை என்ற நிலையிலே தான் இன்றைய திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கின்றன என்பதற்கு இம்மாதிரியான நிகழ்வுகள்தான் சாட்சி. தமிழகம் முழுக்க இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ்களில் பெரும்பாலானவை தரமற்ற முறையிலே இருப்பதனை இதுபோன்ற தொடர் விபத்துகள் உணர்த்துகின்றன.

மக்களைப் பாதுகாப்புடன் உரிய இடத்திற்கு கொண்டுசேர்க்கும் வண்ணம், புதிய பஸ்கள் வாங்கி, ஏற்கனவே உள்ள பஸ்களுக்கு உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *