தனி மரமான ராமதாஸ்.. பரபரப்பாகும் களம்..! என்ன செய்ய போகிறார்..?

Advertisements

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரோட மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நடந்து வரும் அதிகாரச் சண்டையில்  கட்சியின் அதிகாரம் யாருக்கு என்பதில் தொடங்கி மாம்பழத்தை முடக்க வேண்டும் என கங்கணம் கட்டி நீதிமன்றங்களின் படியேறியது வரை அனைத்திலுமே ராமதாஸுக்கு பெரும் பின்னடைவாகத்தான் இருக்கு.

மேலும் சசிகலா தலைமையிலான மூவரணி ஏற்படுத்தியிருக்கும் குழப்பம் போன்றவை  ராமதாஸ் கூடாரத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கு… பாமகவின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகனும்  முன்னாள் இளைஞரணித் தலைவராக இருந்தவருமான தமிழ்க்குமரன் காங்கிரஸில் ஐக்கியமாகி விட்டார்.

இதையே மாடலா வைச்சுக்கிட்டு கட்சியிலிருந்து பலர் வெளியேறிவருவது அதிகரித்துவருகிறது. இதற்கிடையே ராமதாஸுக்கு சசிகலா கொடுத்த வாக்குறுதியை  நிறைவேற்றவில்லை, குறிப்பாக நடிகர் விஜயின் த.வெ.கவுடன்     கூட்டணியை இணைப்பேன் என்று சொன்னது நடக்கவே இல்லை..

அதேநேரம், எடப்பாடியை தோற்கடித்து அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்கிற தனது தீராத ஆசையை நிறைவேற்று வதற்காக ராமதாஸை கூட்டணிக்குள் இழுத்துவிட்டு அவரை தத்தளிக்க வைச்சுட்டார் சசிகலா என்கிற கவலையும் தைலாபுரம் தோட்டத்தில் சுத்திக்கிட்டிருப்பதாக சொல்றாங்க..

2026 சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணித்துவிட்டு அன்புமணிக்கு எதிராக களமாடும் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம் என்று ராமதாஸ் முடிவெடுத்திருந்த நிலையில், அவரோட மகளான ஸ்ரீகாந்தி, பாமக தேர்தலே புறக்கணிப்பு செய்வதை ரசிக்கவில்லை.. அதிமுக கூட்டணியில் அன்புமணி சேர்ந்ததால் அதில் சேர வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

திமுக கூட்டணியும் அழைக்கததால் வெறுத்துப்போயிருந்த நிலையில் தான் சசிகலா கூட்டணிக்கு அழைப்புவிடுத்தார். ஆரம்பத்தில் ராமதாஸ் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் சில நிர்பந்தம் காரணமாக சசிகலா கூட்டணிக்கு வந்தார். டாக்டர் ராமதாஸுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதென்று கட்சியில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, சசிகலாவுடன் கூட்டணி அமைத்து 35 தொகுதிகளில் வேட்பாளர்களை ராமதாஸ் அறிவித்தார். அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் என்ற பெயரில்  சசிகலாவுடன் கூட்டணி அமைக்க சம்மதித்தார். தனது வேட்பாளர்களாக 35 பேரை அறிவித்த ராமதாஸ், அவர்களில் 10 பேர் மகன் அன்புமணியின் வேட்பாளர்களுக்கு எதிராக நேரடியாக களம் காணவேண்டும் என்றும் சசிகலா வேட்பாளர்களில் 2 பேர் அன்புமணி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடவும் முடிவெடுக்கப்பட்டது.

அதிலும் தர்மபுரியில் போட்டியிடும்   மருமகள் சவுமியாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியிருக்கும் டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் போட்டியிடும் பெண்ணாகரத்தில் வேட்பாளரை நிறுத்தவில்லை.. இப்படி, ராமதாஸ் அணி வேட்பாளர்களும் அன்புமணி வேட்பாளர்களும் நேருக்குநேர் போட்டியிடும் 12 தொகுதிகளில் பாமக பெயர்,  கொடியை யார் பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் களேபரங்கள் நடக்க தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள்..

இந்த சூழலில் இனிமேலும் ராமதாஸ் அணியில் இருந்தால் சோபிக்க முடியாது என்று நினைக்கும் தொண்டர்களை அன்புமணி கூடாரம் தன் பக்கம் கொக்கிப் போட்டு இழுத்துவருவதாக கூறப்படுகிறது. உதாரணமா… விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி என்பவரை ராமதாஸ் தனது வேட்பாளராக நியமித்தார் .முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினரான இவர், 50 ஆயிரம் வாக்குகள் வரை ஈஸியாக பெற முடியும்.

புகழேந்தியால் தன் தரப்புக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவரை தனது கட்சிக்குக் கொக்கிப் போட்டு தூக்கிவிட்டது. இதுபோல் ராமதாஸ் தரப்பில் இருந்த நெய்வேலி ஜெகன் போன்ற பலரையும் அன்புமணி தரப்பு அலேக்காக தூக்கி வருகிறது.
அதனால் சோகத்தில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துவிட்ட ராமதாஸுக்கு ஆறுதல் தரும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கார். ராமதாஸுக்கு பலர் துரோகம் செய்திருக்கலாம்..

ஆனால் இன்றும் அவரை நாங்கள் சமூக நீதிப் போராளியாகத்தான் பார்க்கிறோம் என்று வன்னியர் ஓட்டுக்கு அடிபோட்டிருக்கிறார். எந்த மகனுக்காக பல சமரசங்களை ராமதாஸ் செய்து கொண்டாரோ…இன்று அதே மகனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் சொல்றாங்க… இதே மாதிரி, சசிகலாவும், ராமதாஸும் வாங்கும் ஒவ்வொரு ஓட்டும் திமுகவுக்கு சாதகமானது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியலில் ஒரு காலத்தில்  கிங் மேக்கரா இருந்த ராமதாஸின் அரசியலில் தனிமரமாக இருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கு….

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *